27 ஆக., 2013

கடன் பெற்றார் நெஞ்சம்!...

Photo : KRP Senthil
நாங்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் காத்திருந்தேன். அவன் வருவதற்கான நேரம் கடிகாரத்தின் பெரிய முள் இன்னொரு முறை சுற்றி வரவேண்டும் என்பதால் நான் முன் கூட்டியே வந்திருக்கிறேன். காத்திருப்பு என்பது அயர்ச்சி தரும் விசயம். புதிய நபருக்காக அல்லது புதிய விசயத்துக்காக பொறுமை காக்கும் எல்லை சாமியாக எல்லோரும் மாறித்தான் ஆகிறோம். ஆனால் பழகிய நபர்களுக்காக யாரும் காத்திருக்க பழகுவதே இல்லை. காத்திருப்பதின் சுவாரஸ்யம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தக்க மாறுபடுகிறது. என் நண்பன் ஒருவன் மிகுந்த அவசரக்காரான் அவன் பேசுவதுகூட அப்படித்தான் ஓலைப்பாயில் ஒன்னுக்கடிச்சா மாதிரி ஏண்டா இப்படி பேசுறே என்பார் அவனை அவன் பாட்டி. அப்படிப்பட்ட அவனே மணிக்கணக்கில் தேவன் குட்டையில் காத்திருப்பதை பார்த்திருக்கேன். சமீபத்தில் சென்னையின் பிரதான ஜவுளிக்கடையில் கை நிறைய பைகளோடு காத்திருந்தான். கொஞ்சம் வயிறு முன்னுக்கு தள்ளப்பட்டு அருகிலிருக்கும் யார் கூடவோ பேசிக்கொண்டிருந்தான், என்னை சட்டென அடையாளம் கண்டுகொண்டான் பிறகென்ன பக்கத்து ஆளிடமும், காவலாளியிடமும் பைகளை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு என்னுடன் வந்து விட்டான்.

ஒரு மணிநேரத்துக்கு மேலாக அவனே பேசிக்கொண்டிருந்தான். கிட்டதட்ட பத்து வருட வாழ்க்கையை அவ்வளவு விரைவாக உலகில் அவன் ஒருவனால்தான் சொல்ல முடியும் தேவன் குட்டையில் காத்திருந்த அதே ஆளாகத்தான் அவன் இப்போதும் இருக்கிறான். என்ன காத்திருப்பதற்கான ஆளும், காரனமும் மாறிக்கொண்டேயிருப்பதால் அவனால் இப்போதும் சுவரஸ்யமாக பேச முடிகிறது. ஆனால் அந்த ஒரு மணிநேரமும் ஓலப்பாயில் ஒன்னுக்கடிப்பதாக சொல்லும் அவன் பாட்டிதான் என் கண் முன் தெரிந்தார்கள்.

இந்த இடம் முற்றிலும் மாறி இருந்தது. முன்பெல்லாம் சாயங்காலம் ஆச்சுன்னாலே ஆள் நடமாட்டம் இருக்காது. இப்போது அப்படியில்லை கொஞ்சம் வீடுகள் வந்துவிட்டன. தெருவிளக்கு வந்திருக்கிறது. கீழே ஓடிக்கொண்டிருந்த கால்வாய் இப்போது குப்பை மேடாக இருக்கிறது. நாங்கள் அமர்ந்து நேரம் போவது தெரியாமல் பேசும் பாலம் உட்கார முடியாத நிலையில் சரிந்திருக்கிறது. தெரு விளக்கின் ஒளி என் முகம் காட்டாதாவாறு ஒதுங்கி நின்றிருந்தேன். மனசு பழசை அசைபோடத் துவங்கியது.

நாம் இருவரும் சேர்ந்து சுற்றாத இடங்கள் இல்லை. எப்போதும் ரெட்டையர்களாக சுற்றித்திரிந்த காலம் அது. நம்மூரின் வழக்கப்படி நான் முன்கூட்டியே சிங்கப்பூர் சென்றுவிட்டேன். ஆனால் அதற்கடுத்த ஆறே மாதத்தில் உன்னையும் கூட்டிக்கொண்டேன். அதன்பிறகு என் பணம், உன் பணம் என நாம் எப்போதும் பார்த்ததே இல்லை. எல்லோரும் நீ இன்னும் வீடு கூட கட்டலியா? என்றபோது கூட நண்பன் கட்டியிருக்கிறான் அதுவும் என் வீடுதான் என நான் பெருமைப்பட்ட காலம் அது. அதே காலம்தான் நம் உறவை கூறு போட்டது. இத்தனை ஆண்டுகாலம் நம்மை பிரித்தும் வைத்தது.நாம் நினைத்து மகிழ எத்தனை சந்தோஷங்கள் இருந்தனவோ, அத்தனை துயரங்கள் நாம் வெறுத்து ஒதுங்கவும் காரனமாக இருக்கின்றன. இப்போதும் கூட மீண்டும் நம்மை சேர்த்து வைத்த காலத்தை வசைபாடியபடி நான் காத்திருக்கிறேன்.

மிகச்சரியாக ஆறு மாதங்களுக்கு முன்னால ஆளைக்கொளுத்தும் ஒரு மதிய வெயிலின் உக்கிரத்தில் இருந்து உடலை குளிர்விக்க ஒரு லெமன் ஜூசுக்காக சாலையோர கடையில் ஒதுங்கினேன். அங்குதான் உன்னை மீண்டும் சந்தித்தேன். பார்த்த மாத்திரத்திலேயே வெறுப்பு, நெருப்பில் காய்ந்த தோசைக்கல்லின் மீது விழுந்த தண்ணீரைப்போல சடரென புகையாய் கிளம்பினாலும், உன் அதீத புன்னகை வெப்ப சலனத்தால் பெய்யும் மழையென என்னை குளிர்வித்தது. பரஸ்பரம் விசாரிப்புகள் கழிந்து பார் ஒன்றில் பழங்கதைகளை ஊற்றி பருகினோம். நாம் விடைபெற்ற கணத்தில் உனது பேக்கில் இருந்து காசோலை ஒன்றை உருவி அதிலிருந்து ரூ.2 லட்சம் நிரப்பிய தாள் ஒன்றை என்னிடம் தந்து, ”தயவு செய்து வச்சுக்க, இந்தப்பணத்தை கடனாகவே நீ எடுத்துக்கலாம், உன்னால் எப்போது முடிகிறதோ! அப்போது திருப்பினால் போதுமென்றாய்”, வறுமை என் கவுரவத்தை காலில் போட்டு மிதித்தது. 

அதன்பிறகு அவ்வப்போது அலைபேசியில் அழைப்பாய், சென்னை வந்தால் பார் மூடும் வரைக்கும் உற்சாகமாய் பழங்கதைகள் பேசுவாய். சென்ற வாரம் அப்படித்தான் ஒரு சந்திப்பு நம் பிரிவுக்கான காரனங்களை அலச ஆரம்பித்தது. நான் உனக்கு கடனாளி என்பதை மறக்கவைத்தான் அரை நெப்போலியன். நான் நியாயம் பேசினேன். வழக்கமாய் பில் கொடுக்கும் நீ அன்று என்னை கொடுக்க வைத்தாய். அடுத்த அஸ்திரமாக பணத்தை திருப்பிக்கேட்டாய் அதுவும் உடனே வேண்டும் என்றாய். என் ஏழ்மை உன்னுடன் சாமாதனம் செய்து வைக்க சொன்னதால் மன்னிப்பு கேட்டேன். ஒரு வார அவகாசம் தந்தாய். இன்றுடன் அது முடிகிறது. தூரத்தே நீ வருகிறாய், என்ன சொல்லி சமாளிக்கலாம் என மனது அலைபாய்கிறது....

3 கருத்துகள்:

ஜீவன் சுப்பு சொன்னது…

ரெம்பாப் பிரமாதமான எழுத்துண்ணா...!

குட்டன்ஜி சொன்னது…

சிறப்பான சொற்சித்திரம்!

கார்த்திக் சரவணன் சொன்னது…

சொல்லாடல் வித்தகர்னு நான் உங்களை சொன்னதிலே தப்பே இல்லை...