28 பிப்., 2013

தனித்த மரணம்...


Photo : KRP.Senthil
எல்லா உயிர்களும் பிறக்கும்போதே ஒருநாள் செத்தும் போவோம் என அறியாமலே வாழ்வை துவங்குகிறார்கள். மற்ற உயிர்களுக்கு இது தெரியுமோ?! இல்லையோ?!! ஆனால் விவரம் புரிந்தபின் எல்லா மானுடர்க்கும் இது மிக நன்றாகவே தெரியும் தானொரு நாள் செத்துப்போவோம் என்பது. இரு உயிர்கள்  முயங்கும்போது உச்சத்தில் ஒரு உயிர் ஜனிக்கும் ஒரு உயிர். இதற்கு காரணமான மூன்று உயிர்களுமே அறிவதில்லை வாழ்வின் பக்கங்களை.

மரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாம். ஆனால் அதனை சகித்துக்கொள்ள   நன்றாகவே பழக்கபட்டிருக்கிறோம். ஒரு நாய்க்குட்டியைப் போல அறிந்தவர்கள், அறியாதவர்கள் என யார் பின்னாலும் பின்தொடரும் மரணம் சமயம் பார்த்து அவர்களை ஆட்கொள்ளும். ஒரு செடியையோ, மரத்தையோ வெட்டிவிடுகிற மாதிரி அல்லாது  ஒரு கோழியையோ, மீனையோ, ஆட்டையோ கொல்ல முடியாது. அவைகளை நமது தேவைக்கு தகுந்த மாதிரியான பயன்பாட்டிற்கு கொன்று தின்னவே அவ்வுயிர்கள் படைக்கபட்டிருப்பதாய் முடிவு செய்யப்பட்டு வளர்த்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் மனிதர்களுக்கான நியதி வேறு மாதிரியானது தடித்தடியான சட்டப் புத்தகங்களால் வகுக்கப்பட்டிருக்கும் கோட்பாடுகள் கால காலமாக மீறப்பட்டு வந்தாலும் சாப்பிடும் பொருளாக மனிதனே மனிதனை வைக்காததால் வறட்டு கவுரவத்துக்கும், முரட்டு கோபத்துக்கும் இன்னொருவனை பழிவாங்கி, தானும் பலியாகிறான் மனிதன்.
கிராமங்களின்  துக்க வீடுகள் வயதுக்கும், இறப்புக்கும் தக்கமாதிரி இருக்கும். குழந்தைகள் செத்துப் போனாலோ அல்லது இளையோர் யாராவது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ உடனே அடக்கம் செய்துவிடுவார்கள். காரணம் மீதமிருக்கும் குடும்ப உறுப்பினர்கள் துயரத்தின் உச்சத்தில் எதையாவது செய்துகொண்டுவிடக்கூடாது என்கிற பதட்டத்தில் அப்படி அடக்கம் செய்வார்கள். வயதானவர்கள் இறந்தால் அது எழவு வீடாகவே தெரியாது. குறைந்தது ஒரு நாளைக்காவது உடலை வைத்திருப்பார்கள். உற்றார், உறவினர் அனைவருக்கும் ஆளனுப்பி அவர்கள் வந்து சேர்ந்தபின்னர்தான் மயானக் கொட்டகைக்கு எடுத்துப்போவார்கள். உறவினர் யாரும் வெளியூரில் இருந்தால் அவர்கள் வரும்வரைக்கும் வைத்திருக்கவேண்டும். இதில் வெளியூரிலிருப்பவர் சம்மதம் இருந்தால் மட்டுமே அவர்கள் வருவதற்கு முன்னர் அடக்கம் செய்வார்கள்.

நான் சென்னையில் வசிப்பதால் அடிக்கடி யார் சாவுக்கும் போகமுடியாது. ஊருக்கு போகும்போது மட்டும் அம்மா வைத்திருக்கும் பட்டியல் பிரகாரம் ஒவ்வொரு வீடாக சென்று துக்கம் விசாரிக்க செல்வேன். சமயங்களில் அந்தந்த வீடுகளின் துக்க நிழல்கள் இல்லாதிருக்கும்போது அங்கு சென்று அவர்களின் சோகத்தை புதிப்பிப்பது மாதிரி ஆகிவிடுகிறது. ஆனாலும் போகவேண்டியது கட்டாயம் என்று ஆகிறது. போகாவிட்டால் பெரிய குறை ஆகிவிடும். நான் குறை என்று சொன்னது துக்க வீட்டினர் வைக்கும் குறை அல்ல. என் அம்மா வைக்கும் குறை, இப்படி சாதி சனமே வேண்டான்னு போயிட்டா நாளைக்கு உறவுன்னு ஒருத்தரும் இல்லாம போய்விடும்ன்னு ஆதங்கப்படுவார். இது தன் சாவுக்கு வரும் கூட்டம் குறையக்கூடும் என்கிற அச்சமாகவும் இருக்கலாம். இப்போதெல்லாம் செல்பேசி புண்ணியத்தில் துக்கம் விசாரிப்பது எளிதாக மாறியிருக்கிறது.

இப்படி வயசாளிகள் இறந்த துக்க வீட்டில் யாராவது ஒரு சில பெண்கள் மட்டுமே தனித்த ஒப்பாரிகளை தனது தனிப்பட்ட வேறுபல சோகங்களுக்காக அதுவும் அந்த சோகத்துக்கு சம்பந்தமான நபர் வெளியில் அமர்ந்திருந்தால் சாடையாக ஒரு சண்டையையோ, சமாதானத்தையோ தனது ஒப்பாரியில் ஆரம்பிப்பார்கள். சம்பந்தப்பட்ட வேறு சிலரும் ஒப்பாரியில் கலந்துகொண்டால் சுவாரஸ்யத்திற்கு  பஞ்சம் இருக்காது. இப்போது இளம் மனைவிமார்கள் தொலைக்காட்சி சீரியலின் நாயகிகள் போல சம்பிராயதுக்கு அழுதுவைக்கிறார்கள். என் அத்தை ஒருத்தி இருக்கிறாள் எங்கள் நெருங்கிய சொந்தங்கள் இறந்து போகும்போது அவள் ஒப்பாரி வைத்து எங்கள் வீட்டில் பலதலைகள் உருட்டப்படிருக்கின்றன. அவள் சோகம் அவளுக்கு.

சில வருடங்களாகவே இப்படி வயசாளிகள் மாலை நேரங்களில் செத்துப்போனால் இரவைக் கடத்த டிவிடி உதவியுடன் விடியவிடிய அதனை இயக்கும் பொறுப்பிலிருப்பவர் ரசனைக்கு ஏற்ப படம் ஓட்டுவார்கள். கைவசம் வைத்திருக்கும் படங்களாக அது இருப்பதால், அதிலும் பெரும்பாலும் பார்த்த படங்களாக இருப்பதால் சுவாரஸ்யமற்று பார்க்கும் அனைவரும் ஒரு கட்டத்தில் தூங்கிப்போனாலும், நாற்காலியில் சாத்தி அமர்த்தப்பட்டிருக்கும் பிணங்கள் ஒரு வேளை வசனங்களை கேட்டுக்கொண்டிருக்கலாம்.

எங்கள் கிராமத்தைப் பொறுத்தவரை சாவு வீட்டுக்கென சில சம்பிரதாயங்கள் இருக்கின்றன. மனக்கசப்பிலோ அல்லது சொத்துப் பிரச்சினையிலோ பிரிந்தவர்கள் பெரும்பாலும் சாவுகளால் ஒன்றுகூடி விடுவார்கள். கொலை வரை போன உறவுகள் கூட சாவுக்கு வந்து தலைகாட்டிவிட்டு போவார்கள். இப்படி கொலை வரைக்கும் போன உறவுகள் வரும்போது மட்டும் வீட்டு மகளீர் பிரச்சினை தொடங்குவார்கள். சமாதானத்துக்கு காத்திருந்த பங்காளிகள் கைவசம் வைத்திருக்கும் அரதப்பழசு சால்ஜாப்புகளை சொல்லி சமாதானப்படுத்துவார்கள். திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு கூட போகாமல் இருந்தாலும் இருப்பார்கள். சாவுக்கு வந்து தலை காட்டாமல் இருக்க மாட்டார்கள். மரணம் நிகழ்ந்தபின் யார் தன் பின்னால் சுடுகாடுவரை வருவார்கள் என்று தெரியாமல் இருந்தாலும், சாவுக்கு மரியாதை செலுத்தும் ஆட்களாகத்தான் இருக்கிறோம் நாம்.

என் வீட்டில் கோவித்துக்கொண்டு மனைவியுடன் நான் வெளியேறிவிட்ட சமயம். என் இரண்டாவது அக்கா என்னிடம் தொலைபேசியில் இப்படித்தான் சொன்னார்.

"செத்தா தூக்கிப் போடவாவது நாலு ஆட்கள் வேண்டும் என்பதற்காகத்தான் சொந்தங்களே, அதனாலே ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு வந்துடுங்க" என்றார்.

என்கூட நாலு பேர் இல்லை நாப்பதுக்கும் மேல் ஆட்கள் இருக்கிறார்கள் என்றேன். அப்போதே எனக்கு நூற்றுகணக்கான தோழர்கள் இருந்தார்கள். சாவின் பயம் என்னை இன்றுவரைக்குமே எங்கள் வீட்டாருடன் சமாதானமாக போகச்சொல்லவில்லை.

நான் நகரவாசியாக மாறிவிட்டபின் மரணம் பற்றிய, சாவு பற்றிய என் பார்வை  மாறித்தான் போனது. எவ்வளவு பெரிய டிராபிக் நெருக்கடிகள் இருந்தபோதும் ஆமை வேக மரண ஊர்வலம் போகும்போது மட்டும் பொறுத்துக்கொண்டு  வழி விடும் மக்கள். அந்த மரண ஊர்வலத்தின் முன் ஒரு கூட்டம் போடும் குத்தாட்டம் என சுவாரஸ்யமான ஊர்வலமாக இருக்கும். சமயங்களில் சாலை ஓரங்களில் நிற்கும் ஒரு சில இளைஞர்கள் வந்து ஆடிவிட்டு போவதைக்கூட பார்த்திருக்கிறேன்.

ஆனால் நகரத்தில் வாடகை வீட்டிலும். அடுக்ககங்களின் குடியிருப்புகளிலும்  வாழும் மனிதர்களுக்கு அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் செத்துப்போனால் அந்த சாவு அவர்களுக்கு சாபம்தான். வாடகை வீட்டு ஓனர் அதே குடியிருப்பில் இருந்தால் சாவு விழுந்த மறு நிமிடமே சீக்கிரம் எடுத்துடுங்க என உத்தரவு போடுவார். சிலர் மருத்துவமனையில் இறந்துபோனால் வீட்டுக்கே எடுத்துவர அனுமதிக்க மாட்டார்கள். முகப்பேரில் இருக்கும்போது நண்பன் ஒருவனுக்காக வீடு தேடிக்கொண்டிருந்தபோது ஒரு வீட்டு ஓனர்

"எத்தனை பேருக்கு வீடு வேண்டும்" என்றார்.
"ஒரு குடும்பத்துக்காகத்தான்" என்றேன்.
"அது தெரியும் தம்பி, அந்த குடும்பத்தில் யார் யார் இருக்கா?" என்றார்.
"கணவன், மனைவி, ஒரு குழந்தை மட்டும்தான்" என்றேன்.
"வயசானவங்க யாரும் இல்லைல்ல!" என்றார்.
"ஏன் கேக்குறீங்க?" என்றேன்.
"வயசானவங்க இருந்தா சீக்கிரம் செத்துப் போவாங்க, அப்ப இந்த வீட்டில்தான் வைப்பார்கள், நான் அதை விரும்பவில்லை" என்றார்.
நான் கோபமாக "நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் சாவையே சந்திக்காமல் இருக்க வாழ்த்துகிறேன்!" என சொல்லிவிட்டு வந்தேன்.

அடுக்கக வீடுகளில் சாவு ஒரு பிரச்சினைதான், கார், பைக்குகள் நிறுத்தும் இடத்தில் கூட ஆட்கள் நிற்கக் கூடாது என அசோசியேசன் கட்டளை போடும். சமயங்களில் 600 சதுர அடிக்குள் வாழும் வீட்டினர் படும் சிரமங்களை பார்த்திருக்கிறேன். அபூர்வமாகவே தங்கள் வீட்டில் வாடகைக்கு இருக்கும் நபர்களின் துக்கத்தை தன் தோளில் தாங்கும் ஒனர்களை பார்த்திருக்கிறேன்.
சென்ற வாரம் சாலையில் ஒரு மரண ஊர்வலத்தைப் பார்த்தேன். ஒரு தள்ளுவண்டியில் ஒருவரின் உடலை இழுத்துச் சென்றார் ஒருவர், அதன் பின்னால் நடந்து சென்றான்  ஏழு வயதிருக்கும் ஒரு சிறுவன் கூடவே மேலும் இருவர் நடந்து வந்தனர். அதில் ஒருவர் மணியடித்தபடி செல்லும் சேகண்டி. மற்றொருவர் மட்டுமே அந்தப் பையனின் உறவினர் ஆகவோ, பக்கத்து வீட்டுக்காரராகவோ இருக்கக்கூடும். இறந்தது அச்சிறுவனின் தாயாராகவோ,  தந்தையாகவோ இருக்கலாம். உறவுகளற்று  பின் செல்லும்  அந்த சிறுவனின் எதிர்காலம் இனி எப்படி இருக்குமோ?.

அதன்பிறகு இந்தக் கட்டுரை எழுதும் வரைக்குமே அந்த சிறுவனின் முகமே மனதிற்குள் இருக்கிறது..

6 கருத்துகள்:

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிந்திக்க வைத்த பதிவு! எங்கள் பகுதியில் இறப்புக்கு ஒப்பாரி வைப்பது எல்லாம் மறைந்து விட்டது! பகிர்வுக்கு நன்றி!

சீனு சொன்னது…

நீங்கள் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி நன்றாக எழுதுவீர்கள் என்று கேள்விபட்டுள்ளேன், இன்று தான் அதை உணர்ந்தேன்... முகமறியா அந்த சிறுவனின் முகம் ஒருமுறை என்னுளும் வந்து சென்றது....

சென்னையை சேர்ந்த வாடகை வீட்டு கார்கள் நிலை கொஞ்சம் மோசமானது தான்...

ILA (a) இளா சொன்னது…

ராஜூ முருகனை ஞாபகப்படுத்தியது இந்த எழுத்து நடை.

'பசி'பரமசிவம் சொன்னது…

கனமான சோகத்தை என் நெஞ்சில் இறக்கி வைத்துவிட்டது உங்கள் பதிவு.

அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.

'பரிவை' சே.குமார் சொன்னது…

//சென்ற வாரம் சாலையில் ஒரு மரண ஊர்வலத்தைப் பார்த்தேன். ஒரு தள்ளுவண்டியில் ஒருவரின் உடலை இழுத்துச் சென்றார் ஒருவர், அதன் பின்னால் நடந்து சென்றான் ஏழு வயதிருக்கும் ஒரு சிறுவன் கூடவே மேலும் இருவர் நடந்து வந்தனர். அதில் ஒருவர் மணியடித்தபடி செல்லும் சேகண்டி. மற்றொருவர் மட்டுமே அந்தப் பையனின் உறவினர் ஆகவோ, பக்கத்து வீட்டுக்காரராகவோ இருக்கக்கூடும். இறந்தது அச்சிறுவனின் தாயாராகவோ, தந்தையாகவோ இருக்கலாம். உறவுகளற்று பின் செல்லும் அந்த சிறுவனின் எதிர்காலம் இனி எப்படி இருக்குமோ?.//

உங்களது இலக்கியம் தோய்ந்த எழுத்தில் படிக்கும் போது வேதனையா சென்ற கட்டுரை மேலே கொண்டு வந்திருக்கும் உங்கள் வரிகளைப் படித்ததும் வேதனையோடு வலியையும் கொண்டு வந்து விட்டது அண்ணா.

வருண் சொன்னது…

***சென்ற வாரம் சாலையில் ஒரு மரண ஊர்வலத்தைப் பார்த்தேன். ஒரு தள்ளுவண்டியில் ஒருவரின் உடலை இழுத்துச் சென்றார் ஒருவர், அதன் பின்னால் நடந்து சென்றான் ஏழு வயதிருக்கும் ஒரு சிறுவன் கூடவே மேலும் இருவர் நடந்து வந்தனர். அதில் ஒருவர் மணியடித்தபடி செல்லும் சேகண்டி. மற்றொருவர் மட்டுமே அந்தப் பையனின் உறவினர் ஆகவோ, பக்கத்து வீட்டுக்காரராகவோ இருக்கக்கூடும். இறந்தது அச்சிறுவனின் தாயாராகவோ, தந்தையாகவோ இருக்கலாம். உறவுகளற்று பின் செல்லும் அந்த சிறுவனின் எதிர்காலம் இனி எப்படி இருக்குமோ?.***

படிக்க எனக்கு சரியான வாய்ப்புக் கொடுக்கப்படவில்லைனு நாம் குறை சொல்கிறோம். இதுபோல் சிறுவர்களுக்கு வாழக்கூட ஒழுங்கா வாய்ப்பு கொடுக்கப்படவில்லை!

ஏண்டா இறைவா இப்படி? னு அவனைக் கேட்டா, அவன் பகதசிகாமணிகள் எல்லாம் வந்து "கர்மா" "கருமாதி"னு ஏதாவது ஒரு எழவைச் சொல்லுவாணுக!