4 ஜூன், 2009

"ராமசாமி அத்தியாயம் 17"

கடந்தவாரம் முழுவதும் தலைவர் பிரபாகரன் பற்றிய சர்ச்சையால் மனம் ஒரு நிலையில் இல்லை அதனால், என்னால் அடுத்த அத்தியாயத்தை எழுத முடியவில்லை, மறுபடியும் உங்களிடமும், தமிழ்குறிஞ்சி ஆசிரியரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் நான் இரண்டு தலைவர்களைத்தான் என் ரோல் மாடலாக வைத்திருக்கிறேன்,. ஒருவர் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ, இன்னொருவர் தலைவர் பிரபாகரன். அதனால் தமிழர்களின் ஒப்பற்ற தனிப்பெரும் தலைவன் பற்றி வந்த செய்திகளால் நான் மனம் உடைந்து போனேன். பின்பு நம்பிக்கையான நண்பர்களால் தலைவர் உயிருடன்தான் இருக்கிறார் என்ற செய்தி கிடைத்தபின்தான் மனம் அமைதியானது. ஆனாலும் தமிழர்கள் நாம் ஒற்றுமையாக இல்லாமல் போனதால்தான் இப்படி ஒரு பின்னடைவு. ஆனாலும் நம்பிக்கை வைப்போம் இதுவும் ஒருநாள் மாறும்.

அன்று போலீஸ் நான் அப்படி கோபமாக பேசியபோது சற்று பயந்தார்கள், அந்த சமயத்தில் ஐ.ஜி ஆபீஸில் இருந்து ஒரு போன் வந்தது, உடனே இன்ஸ்பெக்டர், எதிர்முனையில் உள்ளவரிடம் சாரி சார், யாருன்னு தெரியாம பேசிட்டேன், தம்பிங்களும் தங்கள யாருன்னு சொல்லல, நான் பாத்துக்கிறேன் என்று போனை வைத்தார், அதன்பின் என்னிடம் என்னதம்பி நீங்க வந்தவுடன் உங்களை பத்தி சொல்லியிருக்க வேண்டாமா? நீங்க யாருன்னு தெரிஞ்சா உங்ககிட்டே அப்படி பேசியிருப்பேனா? பரவாயில்லை டீ சாப்பிடுங்க என்றார். நானும் சாரி சார் உங்க பதவிக்கு மரியாதை கொடுக்காம பேசிட்டேன், நீங்க தகாத வார்த்தைகளை பேசினதும் கோபபட்டுடேன் என்றேன்.

அதன்பின் கடகடவென வேலை நடந்தது, எங்கள் இருவரையும் இன்ஸ்பெக்டரே ஜீப்பில் அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு, இனி நான் பாத்துகிறேன் என்றார், நான் வேண்டாம் சார், உங்க உதவி தேவையின்னா, நான் கட்டாயம் கேட்பேன் என்று அனுப்பிவைத்தேன், அதற்குள் ருசி கம்பனியில் இருந்து அதன் எம்.டி போன் செய்து நாளைக்கு நானே நேரில் வந்து பேசுகிறேன், அதுவரை எனக்கு உங்கள் தரப்பில் இருந்து பிரஷர் கொடுக்கிறார்கள், அவர்களிடம் நீங்கள் எல்லாம் சுமுகமாக முடிந்துவிட்டது என்று சொல்லிவிடுங்கள் என்றார். நானும் சரி சார் நாளைக்கு காலை பத்துமணிக்குள் வந்துவிடுங்கள், நாம் பேசி முடிச்சுக்குவோம் என்றேன்.
அப்போது ஐ.ஜி ஆபீஸில் என் நண்பன் வேலை பார்த்தான், அவன் மூலமாகதான் நான் எல்லா உதவிகளையும் பெற்றேன், மேலும் அப்போது ஜெயலலிதா ஆட்சி,சசிகலா சம்பத்தப்பட்ட சிலருடன் எனக்கு பழக்கம் இருந்தது அதனால் அவர்கள் மூலமாகவும் நான் பேச சொன்னேன்.

இந்த பரபரப்பு முடிந்தவுடன் ராஜா என்னோடு தனியாக பேசினான், அப்போது நம் இருவரின் திருமணம் ஒன்றாகத்தான் நடக்கவேண்டும், காயத்ரி என்ன சொன்னாலும் நான் கேட்கபோறது இல்லை. நாளை இந்த பிரச்சினை முடிந்தவுடன் அவளிடம் சொல்லிவிடுகிறேன் என்றான், நான் திடிரென ஏன் இந்த மனமாற்றம் என்றேன். இல்லடா ஏதோ என் மனசுக்கு தோனுச்சு அதனால்தான் அப்படி முடிவு பண்ணேன் என்றான். நான் வருத்தமாக உன்னை பார்த்தா நிஜமாவே எனக்கு பாவமா இருக்கு, நீ இத ஒரு நாள் முன்னமே சொல்லிருந்தாகூட சந்தோஷபட்டிருப்பேன், ஆனா இனி என்னால உன்ன மாதிரி மாற முடியாது, என்னை பொறுத்தவரை உன்மேல் உனக்கு நம்பிக்கை போய்விட்டது, ஒரு உண்மையான நட்பை நீ இழந்துவிட்டாய் என்றேன், அதற்கு அவன் அழுதான், என்னை என்ன செய்ய சொல்லுறே, என் அப்பாவுக்கு பாக்குறதா, காயத்ரிக்கு பாக்குறதா, இல்ல உனக்கு பாக்குறதா என குழம்பிட்டேன். இப்ப நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்றான். நான் ஒரு இரண்டு நாள் டைம் கொடு, அதுவரைக்கும் காயத்ரிகிட்டே எதுவும் பேசாதே என முடித்துக்கொண்டேன்.

மறுநாள் ருசி கம்பனி எம்.டி நேரில்வந்து பேசினார், எங்கள் தரப்பின் நியாயத்தை புரிந்துகொண்டு எங்களையே தொடர்ந்து நடத்த சொன்னார். ஆனால் நானோ வேண்டாம் சார், ஒருமுறை சங்கடம் வந்துவிட்டது இனி அடிக்கடி பிரச்சினை வரும், மீதம் உள்ள சரக்கை எடுத்துக்கொண்டு பணத்தை செட்டில் செய்யுங்கள் என்றேன். அவரும் அவரின் ஆட்களிடம் சொல்லி சரக்கை கணக்கு பார்த்து எடுத்துக்கொள்கிறேன், பணத்தை செக்காக அனுப்பிவைக்கிறேன் என சென்றுவிட்டார், சொன்னபடி மூன்று நாளில் செட்டில் செய்துவிட்டார்,.

ராஜா என்னடா மூன்று நாளாச்சு எதுவும் பேசமாட்டேன்றே என்றான், நான் நாளை நாம் இருவரும் ஊருக்கு போகலாம்,போகும்போது பேசுகிறேன் என்றேன். ஊருக்கு கிளம்பியபோது இடையில் ஒரு பாரில் வைத்து, நாம் கொஞ்ச காலத்துக்கு பிரிஞ்சு இருப்போம், திருமணமும் தனித்தனியாக நடக்கட்டும், இருவரின் திருமணத்திற்கு பிறகு அடுத்த பிசினஸ் சேர்ந்து செய்வதைபற்றி முடிவு செய்யலாம் என்றேன். அவன் என் இப்படி முடிவு பண்றே என்றான், நான் சாரிடா, நமக்குள்ள ஒரு இடைவெளி விழுந்துட்டு, அதை சரிபண்ண கொஞ்ச நாளாகட்டும் என்றேன். இதுதான் உன்னோட இறுதி முடிவா இருந்தா இது நமக்குள்ளேயே இருக்கட்டும் என்றான். நானும் அதைத்தான் சொல்லனும்ன்னு நினைச்சேன் என்றேன். அதன்பிறகு ஊர் வந்து வழக்கம்போல் அவன் வீட்டில் தங்கி, அவனை மட்டும் பரவாக்கோட்டைக்கு அனுப்பி அப்பாவிடம் என் திருமணத்தை முடிவு செய்துவிடுங்கள் என சொன்னேன்.
அவனும் ஊருக்கு சென்று அப்பாவிடம் பேசி பிப்ரவரி ௨௪ ௨௦௦௨ அன்று என் திருமண தேதியை வைத்துவிட்டு சென்னை வந்தவுடன் ரூபாய் ஒரு இலட்சம் திருமண செலவுக்காக கொடுத்து அனுப்புகிறேன் என சொல்லிவிட்டு வந்தான். மறுநாளே அவன் மட்டும் சென்னை கிளம்பிவிட்டான்.

அந்த சமயத்தில் எல்லா வரவு செலவும் அவனிடம்தான் இருந்தது. அப்போதுதான் சிங்கபூரில் இருந்து வந்திருந்தேன், அதனால் அவனிடம் நான் கணக்கும் கேட்க்கவில்லை. ஏற்கனவே எங்கள் இருவரின் திருமண செலவிற்காக ரூபாய் இரண்டு இலட்சம் தனியாக வைத்திருக்க சொன்னேன். அதிலிருந்து பணம் கொடுப்பான் என நினைத்து நானும் பேசாமல் இருந்துவிட்டேன், ஆனால் பிப்ரவரி மூன்றாம் தேதிவரை அவன் ஒரு ரூபாய் கூட அனுப்பவில்லை. அதற்குள் அப்பா என்னை பணத்திற்காக நச்சரிக்க ஆரம்பித்தார்.

அவனிடம் போன் செய்து பணம் என்னடா ஆச்சு என்றேன். அவனோ நீ சென்னை கிளம்பி வா, இங்கு பத்திரிக்கை அடித்துக்கொண்டு இருவரும் சேர்ந்து ஊருக்கு போகலாம் என்றான். டேய் பத்திரிக்கை இங்கேயே அடித்துக்கொள்ளலாம், பணம் என்னடா ஆச்சு என்றேன் கோபமாக. அவனோ என்கிட்டே ஏது காசு யாருகிட்டயாவது வாங்கித்தான் கொடுக்கணும், சிலபேருகிட்டே கேட்டிருக்கேன், கொடுத்தா தாரேன் என்றான் அலட்சியமாக, எனக்குள் ஏதோ ஒன்று இடிந்தது. இவனை எவ்வளவு நம்பினோம், கடைசியில் இப்படி அலட்சியமாக பேசுகிறானே. பரவாயில்லை, அவனுக்கு தெரிந்தது அவ்வளவுதான், இனி நாமே ஆகவேண்டியதை பாப்போம் என அப்பாவிடம் போய் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்றேன். அவர் ஒரு எண்பதினாயிரம் இருந்தா போதும் என்றார்.

உடனே சிங்கபூரில் இருக்கும் நண்பர்களுக்கும், துபாயில் இருக்கும் மணிகண்டனுக்கும் பேசினேன். அவர்கள் இரண்டு நாட்களுக்குள் பணத்தை அனுப்பிவைக்கிறேன் என்றனர். பிப்ரவரி மூன்றாம் தேதி அன்று காலை எனக்கு ஒரு நண்பர் அனுப்பிய இருபத்தி ஐந்தாயிரம் வந்தது. அன்று மாலை என் சகோதரி மகன் வீரா விபத்தில் சிக்கினான். மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் அவனை தஞ்சாவூர் வினோதகன் மருத்தவமனையில் சேர்த்தோம், ஆனால் அவன் பிப்ரவரி எட்டாம் தேதி எங்களை துயரத்தில் ஆழ்த்திவிட்டு இறந்துபோனான். என் வாழ்வில் நான் மிகவும் நேசித்த இரண்டாம் நபர் அவன். ஏற்கனவே அஞ்சலியின் மரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நான், இவனை பிரிந்ததும் ஆருதலற்று தவித்தேன். சகோதரனின் மரணத்திற்கு வந்த காமாட்சி என் நிலயை பார்த்து வீட்டிலேயே தங்கிவிட்டாள். பிப்ரவரி இருபத்தி நாலாம் தேதி நடக்க இருந்த எங்கள் திருமணம் நின்று போனது.

இதற்கும் ராஜாவுடன் என் நட்பு முறிந்து போனதற்கும் என்ன சம்பந்தம்? அதனை அடுத்தவாரம் எழுதுகிறேன்.

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது ..

கருத்துகள் இல்லை: