22 பிப்., 2009

''ராமசாமி'' அத்தியாயம் 4

ஆரம்பத்தில் எனக்கு சென்னை அவ்வளவாக பிடிக்காது, ஆனால் தற்போது சென்னைவாசியாக மாறிவிட்ட எனக்கு அடிக்கடி ஊருக்கு போகிற வாய்ப்பு கிடைக்காது, ஆனால் எனக்குள் ஒரு கிராமத்தான் அப்படியே இருக்கிறான், கிராமத்தை விட சென்னையில்தான் தனிமனித சுதந்திரம் அதிகம் இருக்கிறது,
கிராமங்களில் எப்போதும் மற்றவர்களின் தலையீடு அதிகம் உண்டு, நகரங்களில் அப்படி கிடையாது, தேவையான வருமானம் இருந்தால் போதும் நகர வாழ்கைதான் சிறப்பு.மீண்டும் என்னுடைய கிராமத்துக்கே சென்றுவிடவேண்டும் என்பதே என் விருப்பம். என்னுடைய மனைவி மற்றும் மகனின் விருப்பம் என்னவென்று இதுவரை கேட்டதில்லை, ஒருவேளை அவர்களுக்கு கிராம வாழ்கை வேண்டாம் என நினைத்தால் என் ஆசையை மூட்டைகட்டி வைக்க வேண்டியதுதான்.
என்ன சிங்கார சென்னையின் தமிழ்தான் கொஞ்சம் கசக்கும், நீண்ட காலம் சென்னையில் இருக்கும் ஆட்கள் பேசுவது ஆரம்பத்தில் எனக்கு சுத்தமா புரியாது அதுவும் ''நீ என்ன சொல்றே சார்'' என்பார்கள் சார் என்று கொடுக்கும் கடைசி வார்த்தைதான் நமக்கான மரியாதை..
ஆனால் போகப்போக எனக்கும் அவர்களுடன் உரையாட பழகிவிட்டது, அவர்கள் சென்னை தமிழிலும் நான் தஞ்சை தமிழிலும் உரையாடும்போது ''உனக்கு சொந்த ஊர் எது சார்'' என கேட்டுவிடுவார்கள்,ஆனாலும் அநியாயத்துக்கு சகலரையும் சார் போட்டுத்தான் கூப்பிடுவார்கள். ஆரம்பத்தில் சென்னையுடன் எனக்கு ஒரு அந்நியத்தன்மை இருந்தது, இப்போது சகஜமாகிவிட்டது.
என்னுடைய நண்பன் இளங்கோ என்னுடன்தான் இருக்கிறான், பள்ளியில் பணிரண்டாம் வகுப்புவரை கூடப்படித்தவன், பத்தாம் வகுப்பில் அவன்தான் பள்ளியில் முதல் மாணவன், பனிரெண்டாம் வகுப்பிலும் அவன்தான் முதல் மாணவன், பிறகு காந்தி கிராமம் படிக்க சென்று விட்டான், தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்த அப்பிராணி அவன், எங்கள் குழுவிலேயே அவன்தான் சீக்கிரம் முன்னுக்கு வருவன் என நினைத்திருந்தேன். காலம் அவன் வாழ்கையில் இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.
இரண்டு வருடங்களுக்கு முன் என்னை சந்திக்க வந்திருந்தான், ஆளே மாறிப்போய் எப்போதும் கையில் புகையும் சிகரெட்டுடன் இருந்தான், எனக்கு முதலில் அதிர்ச்சி, ஆனால் இதுபோன்ற பல சம்பவங்களை பார்த்து விட்டதால், என்னடா இப்படி மாறிட்டே எனக்கேட்டால் அவனால் அப்போது முழுதாக அவனைப்பற்றி சொல்லமுடியவில்லை, தான் சினிமாவில் முயற்சி செய்வதாக சொன்னான்.
நானும் முதலில் சினிமாவில் சேரத்தான் சென்னைவந்தேன் அதனை தனி அத்தியாயத்தில் எழுதவேண்டும் ஆனால் அது எனக்கு சரிப்பட்டு வராது என்றவுடன் சிங்கபூருக்கு மூட்டைகட்டிவிட்டேன், எனக்கே சரிப்பட்டுவராத சினிமா மிகவும் நல்ல ஒருவனை என்ன செய்யபோகிறதோ என்ற கவலை எனக்கு, ஆனால் அவனோ தனக்கு சினிமாதான் எல்லாம் என்று சொன்னான், இன்றுவரை திருமணம் செய்யவில்லை, அதுவேறு வருத்தமாக இருந்தது,
சரிடா நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறாய் வா டீகடைக்கு (TASMAC) என அழைத்துபோனேன் அங்கு இரண்டு பியரை போட்டவுடன் சினிமாவுக்கு வர என்னதாண்டா காரணம் வச்சிருக்கே என ஆரம்பித்தேன், அவன் சொல்ல ஆரம்பித்தான் எனக்கு ஓரளவு திருப்தியாக இருந்தது, அப்போது வடபழனியில் அறை எடுத்து தங்கியிருந்தான், செலவுக்கு பணம் தேவைப்பட்டால் மட்டும் வருவான், அது சனிக்கிழமை என்றால் பியர் சாப்பிடுவோம்..
அத்தியாயம் நாட்களில் அவனுக்கு வி.சேகரிடம் துணை இயக்குனர் வாய்ப்பு கிடைத்தது, அது தொலைக்காட்சி தொடர், பின் சன் தொலைக்காட்சி அதனை நிறுத்திவிட்டதால் அங்கும் வேலை இல்லை, திடீரென சொல்லாமல் ஊருக்கு சென்றுவிட்டான்..
சில நாட்கள் கழித்து மீண்டும் சென்னை வந்தான், அப்போது நானே அவனை ஒரு நல்ல கதை பண்ணேன்டா, எனக்கு சில தயாரிப்பளர்களை தெரியும் அவர்களிடம் சொல்லி ஒரு படம் பண்ணலாம் என்றேன், அப்புறம் அவன் டி.நகரை மையமாக வைத்து ஒரு கதை செய்தான் எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது, ஆனால் செலவு அதிகம் வைக்கும் என்பதால், வேறு ஒன்றை தயார் செய்தோம்.
அந்த சமயம்தான் சிங்கபூரில் இருந்து எனது நண்பர் திரு.ராஜேந்திரன் வந்தார், அவரிடம் அவனை அறிமுகப்படுத்தி வைத்தேன், அவருக்கு அவன் சொன்ன கதை மிகவும் பிடித்திருந்தது, அவர் முழு கதையும் தயார் செய்துவிட்டு ,பட்ஜெட் என்னவென்று சொல்லுங்கள் , நிச்சயம் இந்த படத்தை செய்வோம் என்றார்சில நாட்களில் அவரும் சிங்கப்பூர் சென்றுவிட்டார்.
அப்போது பொங்கல் சமயம், நண்பன் இளங்கோவும் பொங்கலுக்கு ஊருக்கு போகிறேன், அங்கு சென்று கதை எழுதிவிட்டு வருகிறேன் என சென்றுவிட்டான், இடையில் தொலைபேசியில் கதை முடிந்துவிட்டது, சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்றான்.
சென்னை வந்ததும் எங்கடா கதை என்றேன், இன்னும் எழுதலை ஆனால் சொல்கிறேன் என்றான் , கேட்டதற்கு சில குறைகளை தவிர மற்றபடி மிகவும் நன்றாக வந்திருந்தது, சரி குறைகளை திரைக்கதையில் பார்த்துகொள்ளலாம் நீ எனக்கு கதையை சுருக்கி ஒரு சிறுகதை அளவுக்கு எழுதிதாடா என்றேன், கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது அதை எழுத,
ஒருவழியாக எழுதிகொடுத்தான் படித்துவிட்டு இன்னும் சில விசயங்களை சேர்க்கவேண்டும் அதன்பிறகு சிங்கப்பூர் அனுப்பலாம் என்றேன், சரி அதைப்பற்றி பேசுவோம் என்றான், இதற்குள் சிங்கபூரில் இருந்து ஏகப்பட்ட அழைப்புகள், கதை ஏன் இன்னும் அனுப்பவில்லை, ஒவ்வொரு முறையும் ஒரு பொய் சொல்லி சமாளிக்கிறேன்,
அவனுக்கு நிஜமாகவே ஆர்வம் இல்லையா? அல்லது நானே அவனை இழுத்து செல்லவேண்டும்? என நினைக்கிறானா?என்னைபொறுத்தவரை ஆர்வம் இருப்பவர்களுக்குமட்டுமே என்னால் கூட இருந்து உதவ முடியும் , மேலும் முடிந்தவரை ஒருவரிடம் இருந்து எதாவது ஒரு வெளிப்பாட்டை எதிர்பார்ப்பேன் , நானாக எதையும் யாருக்கும் செய்யமாட்டேன், ஏனென்றால் பிடிக்காமல் கூட அவர்கள் எனது வற்புறுத்தலுக்காக செய்யலாம்.. அதை நான் எப்போதும் விரும்புவதில்லை.
இளங்கோ என்னுடன்தான் இருக்கிறான் , அவனின் தினசரி நடவடிக்கை ஒரே மாதிரியாக இருக்கும், காலையில் ஒன்பது மணிக்குத்தான் கண்முழிப்பான், நேர டீகடை( தேநிர்தான்) சென்று ஒரு டீயும் சிகரெட்டும் அடித்துவிட்டு வந்து குளிப்பான் , பிறகு மீண்டும் டீயும் சிகரெட்டும், மத்தியானம் சாப்பாடு, காலையில் சாப்பிடமாட்டன், இரவு எட்டுமணிக்கு சாப்பாடு, பத்துமணிக்கெல்லாம் தூக்கம், இந்த ஒரு நாளில் குறைந்தது ஒரு பாக்கெட் சிகரெட், இடையில் நான் எங்காவது அனுப்புவேன் அதுவும் எப்போதாவதுதான், மற்றபடி அவன் நண்பர்கள் சிலபேரை பார்க்க போவான்,
அவனுக்கு பிடித்தால் பேசுவான், இல்லையென்றால் எப்போதும் சிந்தனைதான், நானும் பலமுறை அவனை மாற்றிக்கொள்ளும்படி சொல்லிவிட்டேன், எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான், கடந்த மூன்று நாட்களாக எட்டு மணிக்கு முழிக்கிறான், காரணம் அவன் குருவாக நினைக்கிற ராகவேந்திரர் கோவிலுக்கு போகிறான்,எனக்கு நிச்சயம் ஒரு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது அப்போது என்னை நிரூபிப்பேன் என்பான், காலம் கடந்து கிடைக்கும் வெற்றியும் ஒரு வகையில் நமக்கு தோல்விதான் என்பேன், அதற்கு கனத்த மௌனம் காப்பான். ஒரு சிறந்த மாணவன் இப்படி ஆனது எனக்கு வருத்தம்தான், ஆனால் அவனுக்கு உண்மையில் எதில் ஈடுபாடு என்றுதான் தெரியவில்லை சிலசமயம் ஆன்மிகம் பற்றி மிக நன்றாக பேசுவான், சில சமயம் சினிமா பற்றி பேசுவான்.
ஆனால் நிறைய சமயங்களில் இவன் சீன் சொல்லும் அழகை பார்த்து வியந்திருக்கிறேன், வாய்ப்பு கிடைத்தால் ஒரு பாலா மாதிரி வரக்கூடிய ஆள்தான், ஆனால் பாலாவிற்கு ஒரு தீவிர முயற்சி இருந்தது, இவனிடம் அது சுத்தமாக இல்லை, இவனை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை , இவனை நம்பி சிங்கப்பூர் நண்பர்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன், இதில் இன்னொரு விஷயம் இந்த படத்தின் தயாரிப்பாளரில் நானும் ஒருவன்.
ஆனால் இவன் ஒன்றை மட்டும் நீண்ட நாட்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டான், சினிமாவிற்காக அவனது பெயரை வர்கோத்தமன் என மாற்றிவிட்டான்....

இத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது

கருத்துகள் இல்லை: